top of page

காருகுறிச்சி அருணாசலம்

நண்பர் காருகுறிச்சி அருணாசலம் சிறுவயதிலேயே எங்கள் ஊரில் கல்யாணம் செய்துகொண்டவர். எங்கள் ஊர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதிலிருந்தே அவருக்கு ‘யோகம்’ தொடங்கிவிட்டதாக இங்கே பேசிக்கொள்வார்கள்.

ஒருநாள் காலை 7 மணி இருக்கும். நான் வெளிக்குப் போய்விட்டு, குச்சியால் பல் தேய்த்துக்கொண்டே கரை வழியாக ஊருக்குள் வந்தேன். காளியம்மன் கோவில் எதிரிலிருந்த வேப்ப மரத்தடியில், ஒரு கல்லின் மேல் ஒரு காலைத் தூக்கி வைத்துக்கொண்டு, அப்போதுதான் குளித்த தலைமுடியை ஈரம் உணர விரல்களால் சிக்கெடுத்துக் கொண்டு ஒரு ராகத்தை – அது என்ன ராகம் என்று இப்பொழுது ஞாபகம் இல்லை முனகிக் கொண்டிருந்தார். அழுத்தமான பொடிக் கலரில் சில்க் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கைகளில் தங்கக் காப்புகள் இருந்ததாக ஞாபகம், நான் கொஞ்சம் நின்றேன். மறுபக்கம் அவர் திரும்பி இருந்ததால் என்னைக் கவனிக்கவில்லை. வாயினால் பாடுவதில் இவ்வளவு இனிமையாக இருந்ததை நான் முதன் முதலில் அன்றுதான் கேட்டேன். வீட்டிற்கு வந்து, அந்தப் பிள்ளையாண்டன் யார் என்று விசாரித்தேன். ”நம்ம” ராம லக்ஷ்மியோட மாப்பிள்ளை; காரிகுறிச்சி, என்று சொன்னார்கள்.

நான் அவரைப் பார்க்க விரும்புவதாகத் தகவல் சொல்லி யனுப்பினேன். மலர்ந்த முகத்தோடும் கும்பிட்ட கைகளோடும் அவரே என்னைப் பார்க்க வந்துவிட்டார். அதிலிருந்து எங்கள் சினேகம் முளைவிட ஆரம்பித்துவிட்டது.

அவருடைய நாதஸ்வரத்தைவிட அவருடைய வாய்ப்பாட்டையே நான் அதிகம் விரும்பிக் கேட்பேன். நாதஸ்வரத்தை வீட்டில் சாதகம் பண்ணிக் கொண்டிருக்கும்போது, வடநாட்டு ஷெனாய் வாத்தியம்போல் அவரை வாசிக்கச் சொல்லிக் கேட்பதில் எனக்கு ஒரு தனிருசி.

நான் முதலில் சந்தித்த அருணாசலம், தூய கதராடை அணிந்தவர். எந்தவிதமான கெட்ட வழக்கங்களும் இல்லாதவர். கெட்ட வழக்கங்களையும் பழக்கங்களையும் அறவே வெறுத்தவர். இந்தக் குணத்தைக் கண்டு நாங்கள் அவரை மிகவும் மதித்தோம். ‘உங்களால் எப்படி இந்த மாதிரியான வைராக்கியத்தோடு இருக்க முடிகிறது’ என்று கேட்போம். அதற்கு அவர் இந்த மாதிரி பதில் சொல்லுவார். ‘நாயனம் வாசிப்பவர்களைப்பற்றி, குடிகாரன்கள், நடத்தை மோசமானவர்கள் என்று அபிப்ராயம் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும். இதுதான் என் லக்ஷியம்.”

அவருடைய குருபக்தி அபாரமானது. அவருடைய சகலரும் என்னுடைய சங்கீத உபாத்தியாயருமான குருமலை நாதஸ்வரம் பொன்னுசாமி பிள்ளைக்கு அப்பொழுது தலைக் குழந்தை ஆண் பிறந்தது. அருணாசலத்தைப் பெயர் வைக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். குழந்தைக்கு, பாலசுப்ரமணியம் என்று பெயர் சூட்டினார். பிறகு இது என்னுடைய குரு ராஜரத்தினம் பிள்ளையின் சொந்தப் பெயர் என்று சொன்னார். ராஜரத்தினம் பிள்ளைக்கு இப்படி ஒரு பெயர் இருப்பது அன்று தான் தெரியவந்தது எங்களுக்கு. பின்பு நாள் ஆக ஆக அவர் சங்கீத உலகத்தில் சுடர்விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தார்; எப்பவாவது திடீரென்று எதிர்பார்க்காதபோது வந்து நிற்பார். சாப்பிடுவார். பேசுவார். பாடச் சொல்லிக் கேட்போம். சங்கீத உலகில் பிரபல்யம் ஆனபோது அவர் இசை ஒன்றில்த்தான் குருவைப் பின்பற்றி வந்தார்; பிரபல்யம் அதிகம் ஆன உடனே “எல்லா விஷயங்களிலுமே” குருவைப் பின்பற்றி நடக்க ஆரம்பித்து விட்டார்! ‘நந்தவனத்து ஆண்டி” போல இல்லாமல் உடம்பை ஜாக்ரதையாக வைத்திருந்தால் நாம் இன்றும் கானாம்ருத மழையில் சொட்டச் சொட்ட நனைந்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருப்போம். நாம் அதற்குக் கொடுத்து வைக்கவில்லை. அவரைப் பிரிந்த இந்த துக்கமான வேளையில் அவரோடு புரிந்த பல காரியங்கள் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. அவருடைய இரண்டாம் தார கல்யாணத்துக்கு அவரோடு பெண் பார்க்க போனது. எங்கள் வீட்டில் வந்து பாடிய சக்ரவாக ராக ஆலாபனம். சோவியத் ஸ்தானிகர் காரியாலயம் இந்தியாவில் ஏற்பட்டவுடன், ராஜரத்தினம் பிள்ளையின் தோடி ராக ஆலாபனை ரிக்கார்டை, சோவியத் இசைக் கலைஞர்களுக்கு சோவியத் ஸ்தானிகர் மூலம் அனுப்பியது. என்னுடைய கல்யாணத்துக்கு அவர் வந்து வாசிக்க வேண்டுமென்று நீண்டகாலமாக அவர் வற்புறுத்திக்கொண்டு வந்தது, அப்புறம் அது நடக்காமல் போனது. அவருடைய மூத்தமகள் சடங்கிற்கு நான் போயிருந்த போது என்னை வரவேற்ற காட்சி. “நாதஸ்வரத்துக்கு, அது வடக்கே சோழதேசம்தான்; அந்த சீவாளியின் சத்தமே துண்டாய்த் தெரியுமே” என்று எங்கள் கிராமத்துப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அருணாசலம் காலத்தில், சோழ தேசத்து நாதஸ்வரக்காரர்கள் எல்லாம் தெற்கே திரும்பிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்! இனி அவருடைய நாதஸ்வர இசையை, ரிக்கார்டுகளில்தான் கேட்க முடியும் அந்த உயிருள்ள மலர்ந்த முகத்தை பார்க்கவே முடியாது. எத்தனையோ தரம் காருகுறிச்சி அருணாசலம் தன்னுடைய ஊருக்கு வரும்படி என்னை அழைத்திருப்பார். நானும் போகக் கூடாது என்று இல்லை; எப்படியோ கடேசி வரைக்கும் போக முடியாமலே போய்விட்டது. எப்பவாவது காருகுறிச்சி வழியாக ரயிலில் போக வேண்டியது ஏற்படும். அப்போது மனசில் ஒரு பரபரப்புத் தோணும். அங்கு தெரிகிற வீடுகளில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எது அவருடைய வீடாக இருக்கும் என்று யூகிப்பேன்! அவர் தட்டுப்படும் போது உங்கள் ஊர் வழியாகப் போனேன் என்று சொல்லுகிறதில்லை. ஆனால் அவர் கோவில்பட்டி வந்து நிரந்தரமாக இருக்க ஆரம்பித்த பிறகு எத்தனையோ தரம் சொல்லி இருக்கிறேன், உங்கள் ஊர் வழியாகப் போனேன் என்று. ஆனால் அவருக்கு முந்தி இருந்ததில் அரைக்கால் வாசிகூட ஊர்ப்பிடித்தம் இல்லாமல் போய்விட்டது பிறகு. அதுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். கோவில்பட்டிக்கும் இடைசெவலுக்கும் எட்டுக்கல் தொலைவுகூட இராது. எப்பமாவது ஒரு தரம்தான் அவரைப் பார்க்கப் போவேன். அடேயப்பா, எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா! ”பக்கத்தில், இந்தா இருந்து கொண்டே அடிக்கடி வரமாட்டீங்கிறீளே?” என்று கேட்பார். “நீங்கள் எத்தனை தரம் இடைசெவல் வழியாகப் போகிறீர்கள்; நீங்கள் வந்திருக்கிறீர்களா?” என்று திருப்பிக் கேட்பேன். பாவம்; இந்தக் கேள்வி சங்கடமாக இருக்கும் அவருக்கு. அவர் பிரபலமாவதற்குமுன் அடிக்கடி எங்கள் ஊருக்கு வருவார். அனேகமாக அவருக்கு கல்யாணம் ஆகும்போது பதினெட்டு அல்லது அதற்கு ஏறக்குறைய இருக்கலாம் வயசு. ஆகவே அடி நாளிலிருந்தே அவரோடு மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது எனக்கு. சிறிய வயசிலேயே அவர் ரொம்ப ஜோராகப்பாடுவார். சாப்பிடுகிற நேரம், தூங்குகிற நேரம் தவிர பாக்கி நேரங்களிலெல்லாம் சதா ஏதாவது ஒரு ராகத்தை அவரை அறியாமலேயே அவர் முனகிக் கொண்டிருப்பார். அது கேட்க மிக மனோரம்மியமாய் இருக்கும். அவர் அப்பொழுது, பெண்களே ஆசைப்படும் படியாக அவ்வளவு கூந்தல் தலை முடி வைத்திருந்தார். தலை முழுகிவிட்டு, விரிந்து தொங்கும் கூந்தலினூடே விரல்களை நுளைத்து சிக்கெடுத்துக் கொண்டே பிரமாதமாக ராக ஆலாபனம் செய்வார். அதை நாள் முக்சூடும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

கச்சேரிகளுக்குப் புறப்படுவதற்கு முன்னால் அவர் தன்னை அலங்கரித்துக் கொள்வார். நாங்கள் சூழ உட்கார்ந்து கொண்டு வெகு சுவாரஸ்யமாக இந்த அலங்கார வைபவத்தை விடாமல் பார்த்துக் கொண்டே இருப்போம். இதில் எங்களுக்கு அலுப்புத் தட்டியதே இல்லை! தடவை தடவையாகப் பவுடர் பூசிக் கொள்கிறது. கடுக்கன், மோதிரங்கள், சங்கிலியை துடைத்துப் போட்டுக் கொள்கிறது, பொட்டு வைத்துக்கொள்கிறது. வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்கிறது. (ஒரு குஷியில் எங்கள் மீதும் பூசி விடுவார்; நாங்கள் மறுத்தாலும்விட மாட்டார்!) ஒருவகை மூக்குப் பொடியை உபையோகித்தார். அது நாகர் கோவிலில்தான் கிடைக்கும் என்று சொல்லுவார். நாங்களும் அதை வாங்கி உறிஞ்சிப் பார்ப்போம்; எல்லா மூக்குப்பொடி போடுகிறவர்களும் மூக்கின் இரண்டு துவாரங்களிலும் உறிஞ்சுவார்கள். ஆனால் காருகுறிச்சி மட்டும் ஒரே ஒரு துவாரத்தின் வழியாக மட்டிலுமே பொடியை உறிஞ்சுவார். என்ன காரணம் என்று கேட்டதற்கு, ”மூக்குப்பொடி போடுகிறவர்களுக்கு நிரந்தரமாக மூக்கு எப்பவும் மூடித்தான் இருக்கும். பொடி போடுகிற அந்த சில நிமிஷங்களுக்குத்தான் திறந்திருக்கும். திரும்பவும் பழைய கதைதான். இதனால் தூக்கத்தில் – சிலசமயம் முழிப்பில் கூட – வாயினால் சுவாசிக்க வேண்டியதிருக்கிறது. ஒரு துவாரத்தில் மட்டும் பொடி உறிஞ்சி பழகியவர்களுக்கு இந்த கஷ்டமில்லை, என்று சொன்னார்!

கோவில்பட்டிக்கு அவர் குடி வந்த புதிதில் ஒருநாள் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். தற்செயலாக ஒரு அலமாரியை ஏதோ ஒரு காரியத்துக்காக திறந்தார். அதில் பல புஸ்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “புஸ்தகங்களா!; எங்கே பார்ப்போம்” என்று வரிசையாய் ஒவ்வொன்றாய் எடுத்துப்பார்த்தேன். அவ்வளவும் இலக்கியத்தரம் மிகுந்த நாவல்கள், சிறுகதைகள்! எனக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. எனக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டில் நாதஸ்வரம் வாசிப்பவர்களில் சிறந்த இலக்கியப் படைப்புகளை உட்கார்ந்து படிக்க நான் பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை.

ஒரு தடவை அவர் மார்க்ஸிம் கார்க்கி எழுதிய ‘அன்னை யை மிகவும் அனுபவித்துப் படித்துக் கொண்டிருக்கக் கண்டேன். அவர் காருகுறிச்சியில் வசித்து வந்த பொழுது அந்த ஊர் பஞ்சாயத்துத் தேர்தலில் நிற்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். பத்திரிகையிலும் வந்திருந்தது. அவருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். தேர்தலில் நிற்க வேண்டாமென்றும், அது இவருடைய ஜோலி அல்ல என்றும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேலைகள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதென்றும், ‘நிற்கவே கூடாது தேர்தலில்’ என்றும் எழுதினேன். எதிர்பார்த்தபடியே பதிலும் வந்தது. தேர்தலுக்கு நிற்கவில்லை அவர். எனக்கு மூன்று நான்கே கடிதங்கள் தான் அவர் எழுதி இருக்கிறார். அதில் ஒன்றிரண்டு கடிதங்களை மிகவும் பத்திரமாக வைத்திருக்கிறேன்


அவருடைய வாத்தியத்தில் நாங்கள் சொல்லுகிற விமர்சனங்களை, புகழ்ச்சியைப் போலவே குறைகளையும், காது கொடுத்துக் கேட்பார். அவருடைய வாத்தியத்தில் நான் சொன்னவைகளில் பிரதானமானது, ராக ஆலாபனையில் சில இடங்களில் விசேஷ அழுத்தம் – அமித அழுத்தம் – கொடுத்து வாசிக்கக் கூடாது என்பது. அது உப்பைக் கூடக் கொஞ்சம் போட்டது போல் இருக்கும். நடிப்பில் “ஓவர் ஆக்ட்” என்று சொல்கிறோமே அதுமாதரி. அடுத்தது, இவருடைய வாத்தியத்தில் குழலிலிருந்து வருகிற இசை பீச்சிக் கொண்டு வருகிற மாதரி வருகிறது. அது சாதாரண வேகமாக இயற்கை நீரோட்டம் மாதரி இருந்தால் போதும் என்பது.

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் பலமாகச் சிரிப்பதின் மூலம் ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவார். “நீங்கள் எழுத்தாளர்கள்; என்னெல்லாமோ சொல்லுகிறீர்கள்” என்று சொல்லிவிடுவார். ஆனாலும் அதைப் பற்றி சிந்தனை செய்வார். தன்னுடைய குருவைப் போலவே இவரும் 72 மேளகர்த்தாவை ஏற்றுக் கொள்ளவில்லை. மேளகர்த்தா 36 தான் என்ற கொள்கையுடையவர். ஆகவே எப்பவாவது நாங்கள் மோதிக் கொள்வோம்; ஆனந்தமாக சிரித்துக்கொண்டே கேட்டுக் கொண்டிருப்பார். சிரிப்பு ஒன்றுதான் பதில்; அவருக்குக் கோபம் வந்து நான் ஒருதடவைகூட பார்த்ததில்லை.

அவருக்கு ஆங்கிலம் படித்துக் கொள்ளவேண்டுமென்று மிகுந்த ஆசை இருந்தது. தமிழ் பேசும்போது கனமான இங்கிலீஷ் வார்த்தைகளைப் போட்டுப் பேசுவார். உச்சரிப்பும் பிரயோகமும் சுத்தமாக இருக்கும். அப்படிப் பேசுவதில் அவருக்கு ஒரு மோகம்! அவருடைய கச்சேரியின் கடேசிப் பகுதிகளை நான் மிகவும் விரும்புவேன். ‘துக்கடாக்களை வாசிக்கு முன்னதாக ராகங்களை ஷெனாய் பாணியில் வாசிப்பார். மனங்கள் அப்படியே அந்த இசை மழையில் நனைந்து குதூகலிக்கும். துள்ளும். ஊஞ்சலாடும். கனவு காணும். பூர்வஜென்ம ஞாபகங்கள் நினைவுக்கு வருவது போலிருக்கும்.

வீட்டில் எப்போதாவது அவர் சாதகம் செய்து கொண்டிருக்கும் போது நான் போக நேர்ந்தால் என்னைக் கண்டதும் ஷெனாய் பாணியில் ஊதி என்னை வரவேற்பார்! எனக்கு அது பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். விருந்தினர்களுக்கு அவர் கையாலேயே பரிமாறுவதில் அவருக்கு ஒரு பிரியம். இரவு முழுவதும் விழித்திருந்தாலும், பகல்த் தூக்கம் கொள்வதில்லை அவர். அப்படி ஒரு பிடிவாதமான பழக்கம் கொண்டிருந்தார். பகல் போஜனம் முடிந்தவுடன் எங்களுக்குத் தூக்கம் சொக்கும். அவரோ சிரித்து பாடிக்கொண்டே ஜமுக்காளத்தை மடித்துவிரித்து சீட்டுக்கட்டை கலைத்துப் போடுவார். என்ன செய்யமுடியும்; சிவனே என்று விளையாடுவோம். சினேகத்தில் எங்களை வெற்றி கொண்டதைப் போல் ஆட்டத்திலும் எங்களை வெற்றி கொள்வார்.

அவர் மறைந்துவிட்டார் என்று சொன்னாலும் இன்னும் அவர் இருப்பதாகவே படுகிறது எனக்கு. எங்கோ தூரப் பயணம் போயிருக் கிறார். திரும்பவும் வருவார். இப்படித் தோன்றுகிறது எனக்கு! 20-2-1966

Recent Posts

See All
bottom of page