top of page

“கொஞ்சமாவது மக்களுக்குக் கோபம் வேணாமா?”

“கொஞ்சமாவது மக்களுக்குக் கோபம் வேணாமா?”


“என்னத்த கேக்கப் போறிய? ஒரு விவசாயக் குடும்பத்தில பொறந்திருந்தாலும், ‘முன்னத்தி ஏர்க்காரன்’னு பேர் எடுத்திருந்தாலும், ஏர்பிடித்து உழத் தெரியாதவன் நான். அரசியல்ல இருந்திருக்கேன்; அரசியலைப் பற்றி சரியாகத் தெரியாது. சங்கீதத்தில் இருந்திருக்கேன்; ஒரு கீர்த்தனைக்குச் சரியாத் தாளம் போடத் தெரியாது. பேனாவுக்குச் சொந்தக்காரன்; ஆனா இன்னும் பிழையில்லாம எழுதத் தெரியாது. வெட்டிக்கதை கதைப்பேன். என்ன பிரயோசனம்... பிரசங்கி இல்லை.”


புதுச்சேரியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வசித்துவரும் பல்கலைக்கழக வளாகக் குடியிருப்பில் சந்தித்தோம். ஜென் ஞானிக்கும், குறும்புக்காரச் சிறுவனுக்கும் இடையிலான மனநிலையில் இருந்தார்.


94 வயது கி.ரா-வின் குரல் இது.உங்களின் இலக்கியப் பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ அறிவிச்சி்ருக்காங்க. எப்படி உணர்றீங்க?


“இந்த விருது எனக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கிற முதல் அங்கீகாரம். சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா, அந்த நாட்டுக்கு வரச் சொல்லிட்டாங்கன்னா... கஷ்டமாபோயிடும். வயசாயிடுச்சுல்லா... முன்னாடில்லாம் வெளிநாட்டுக்குப் போனா, அபூர்வமான காட்சிகளைப் பார்க்கலாம். புதுப்புது மனிதர்களைச் சந்திக்கலாம். புது விஷயங்களைத் தெரிஞ்சிக்கலாம். எல்லாத்துக்கும் மேல மனசு குதூகலமாகும்னு ஒண்ணு இருந்துச்சு. இப்போல்லாம் அப்பிடி இல்லை. அதான் எல்லாத்தையும் டி.வி-ல காமிச்சிருதான்லா. நாம நேர்ல போய் பாக்கிறதைவிடவும் டி.வி-ல பாக்கிறது ரொம்ப நல்லாருக்கு. வித்தியாசமாவும் இருக்கு. விருதை வாங்க நேர்ல கூப்பிடாம இருக்கணும்னு தோணுது.”


உங்களோட ஒரு நாள் எப்படிப் போகுது?


``ஒரு நாள்போல இன்னொரு நாள் இருக்காதுன்னாலும், செஞ்சதையே தெனமும் திரும்பத் திரும்பச் செய்யவேண்டியிருக்கு. இப்போ இருக்கிற மனுஷனுக்கு காலையில வெளிக்குப் போறதே ஒரு சாதனையா இருக்கு. முக்குறான், முனகுறான். பின்னாடி தட்டிக்கொடுத்துக்கிறான், வயித்துல குத்திக்கிறான். காலையில, கலகலன்னு வெளிக்குப் போச்சுன்னு ஒரு மனுஷன் சொல்லிட்டான்னா, அவனைப் பார்த்துப் பொறாமைப்படவேண்டியதா இருக்கு. காலையில எழுந்ததும் வாயைக் கொப்பளிச்சுத் துப்புறதுபோல வயித்தைக் கொப்பளிச்சுத் துப்புறதுக்கு இனிமா எடுத்துக்கிடணும். நான் 60 வருஷமா இனிமா எடுத்துக்கிறேன். இதைச் சொன்னா டாக்டர்கள் மிரள்றாங்க. வினோபா பாவேவின் சர்வோதயா சங்கத்துல இருந்துதான் இதைக் கத்துக்கிட்டேன். ஒரு நாள் வயிறு சுத்தமானாப் போதும்... அந்த நாள் சுத்தமானதுபோல அவ்வளவு புத்துணர்ச்சியா இருக்கு. மத்தபடி சொல்லிக்க புதுசா ஒண்ணுமில்லை... நாம பேசாம இருந்தாலும், நாட்கள் அதுபாட்டுக்கு வருது போவுது. நாமதான் அதுகிட்ட சூதானமா இருக்கவேண்டியிருக்கு.’’

இத்தனை ஆண்டு தமிழோட புழங்கினதுல இந்த மொழியில நீங்க வியக்கிற விஷயம் என்ன?


``தமிழ் ஒரு மொழி. அவ்வளவுதான். அதுல வியக்கிறதுக்கு என்ன இருக்கு? இதே நான் தமிழ் பண்டிட்டா இருந்திருந்தேன்னா, ஆகா... தமிழில் இருக்கிற ‘ழ’கர சிறப்பு வேறு எந்த மொழியில் இருக்குன்னு சொல்லிருப்பேன். இது மாதிரியான சிறப்பு எல்லா மொழிகளிலுமே இருக்கத்தான் செய்யுது. உலக மொழிகளில் தமிழ் மொழி மிகத் தொன்மையானதுன்னு எல்லாரும் ஒப்புக்கிறாங்களேன்னு நீங்க கேட்கலாம். ஆனா, எல்லா மொழிகளுக்குமே இந்தத் தொன்மை இருக்கத்தான் செய்யுது. ஒரு இடத்துல எப்போ மனுஷன் தோன்றினானோ, அப்பவே சப்தங்களும் மொழியும் தோன்றிருது. ஆப்பிரிக்கா நாட்டுல எல்லாரும் ஒரு மொழியா பேசுறான்? இலக்கணத்தை எழுதின தொல்காப்பியனே ‘பழையன கழிதல்’னு சொல்றான். இது எல்லாத்துக்கும் தெரியும். புதியன புகும்கிறதும் தெரியும். ஆனா, ஒப்புக்க மாட்டேங்கிறான். கோயில்கள்ல ஒரு சாதியினரை மட்டும் உள்ளேவிடாம அழிச்சாட்டியம் பண்றோம்ல. அதுபோலத்தான் இதை நீங்க பார்க்கணும். சைகை மொழி படிச்ச அம்மா ஒருத்தங்க... வாய்பேச முடியாதவங்களைவெச்சு ஒரு நாடகம் போட்டாங்க. அவங்ககிட்ட ‘இந்த மொழியைக் கத்துக்கிட்டா உலகம் முழுக்க ஒரு பிரச்னையும் இல்லாம சுத்தலாமே’ன்னு சொன்னேன். அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க... ‘மொத்த உலகத்துக்கும் பொதுவான சைகை மொழின்னு ஒண்ணு இல்லை. இங்கிலாந்துல வேற சைகை மொழியாம். அமெரிக்காவுல வேற சைகை மொழி.’ அடப்பாவிங்களா அதைக்கூட பிரிச்சுவெச்சுட்டீங்களானு இருந்தது. மைல் கல்லுல எல்லாருக்கும் புரியற மாதிரி ஒண்ணு போடறதுக்குப் பதிலா `க’ போடறதுல என்ன பெருமை இருக்கு?’’


உங்களோட படைப்புகள் எல்லாத்தையும் தமிழ் மொழி வழியாத்தானே எழுதறீங்க... நான் எழுதுற மொழி இதுன்னு உங்களுக்குப் பெருமிதம் இல்லையா?


“இதுல பெருமிதம் எங்க இருக்கு? தமிழ் மொழி இல்லைன்னா... இன்னொரு மொழியில எழுதப்போறேன், அவ்வளவுதான். எழுதுறதுனாலேயே அந்த மொழியைச் சிலாகிக்கணும்னு அவசியம் இல்லை. ‘தமிழைப் பழித்தால் தாய் தடுத்தாலும் விடேன்’னு சொல்றதெல்லாம் என்னால ரசிக்க முடியலை. இதை நான் சொல்லிட்டேன்ல, ‘அங்க என்ன சத்தம்...’கிறதுபோல என்னைப் பாப்பாங்க இனிமே. மொழிய எப்பவும் எந்த சட்ட திட்டமும் போட்டு வளர்க்க முடியாதுங்கிறதை முதல்ல மனசுல வெச்சுக்கணும்.உலகத்தைப் படிக்கிறதுக்குன்னு ஒரு மொழி இருக்கு. அதை முதல்ல மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுங்க, அதுபோதும்.”


மொழி அரசியலாகும்போது , நாம நம்ம மொழியை நேசிக்க, பாதுகாக்க வேணாமா?


“ஒரு மொழியைவெச்சு இல்லாத கூத்தெல்லாம் நடந்தது இங்கதான். அரசியல் அதிகாரத்தைப் பிடிச்சாங்க. ஆட்சியை மாத்துனாங்க. பொழைப்பை மட்டும் நல்லா செழுமையா நடத்துறாங்க. அவங்களுக்கு வேணா மொழி மீது பற்று, பாசம் எல்லாம் இருக்கலாம். இருந்தாத்தானே அவங்க காலம் ஓட்ட முடியும். ஆனா, எனக்கு மொழி மீது பற்று, பாசம் எல்லாம் கிடையாது. நான் இப்படிச் சொல்றதைப் பார்த்து அரள வேணாம். லகுவா எடுத்துக்கிடுங்க. மொழிக்குள்ள சட்ட திட்டங்களைக் கொண்டுவர்றதை விடுங்க. மொழி தானா வளரும். ஒரு மொழியைப் பயன்படுத்தி ஒருத்தனைப் பார்த்து, ‘நீ கோயிலுக்குள்ள வரக் கூடாதுன்னு சொல்ல முடியுதுன்னா, அந்த மொழி மீது எனக்கென்ன வியப்பு வேண்டிக்கிடக்குன்னு கேக்குறேன்.”


தனிப்பட்ட பேச்சில் ஒரு முறை... ‘தமிழில் முதல்ல கவிதைகளைத் தடை பண்ணணும், அப்பத்தான் மொழி வளரும்’னு சொன்னீங்க. தமிழ்க் கவிதைகள் மீது அப்படி என்ன வெறுப்பு?


``என்னைப் பாக்க நிறைய இளைஞர்கள் வருவாங்க. அவங்க கையில வெச்சிருக்கிற புத்தகம் என்னன்னு பார்ப்பேன். அது கவிதைப் புத்தகமா இருந்தா அவங்க பக்கமே திரும்ப மாட்டேன். காரணம், எனக்குக் கவிதைகள் மீது வெறுப்பெல்லாம் கிடையாது. உலகத்துக்குக் கொடுக்கிற அளவுக்கு உலக மொழிகளோடு போட்டிபோடுற அளவுக்கு நம்மகிட்ட கவிதைச் செல்வம் இருக்கு. சங்க இலக்கியம் மாதிரி வேற எந்த மொழியில இருக்கு? கம்பன் மாதிரி எந்த மொழியிலும் சொன்னவன் கிடையாது. பிரமாதமா இருக்கும். தமிழ்க் கவிதைகள்ல எல்லா வழிமுறைகள்லயும் சொல்லவேண்டியதைச் சொல்லியாச்சு. புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்கிறது என் எண்ணம். உதாரணம் சொல்றேன் கேளுங்க. `உலகம்’னு எழுதிட்டுப் போயிட்டே இருக்கிற இடத்துல... ஒருத்தர் `ஆழி சூழ் உலகு’னு எழுதுவார். இன்னொருத்தர் ‘ஆழி சூழ் உலகத்தின்கண்’னு எழுதுவார். என்ன `கண்’ அது. இதையே இன்னொருத்தர் ‘ஏழாழி சூழ் உலகத்தின் கண்ணு’னு எழுதுவார். இந்த ஜாலம் எல்லாம் உரைநடைகளை வளரவிடாம அல்லது இளைஞர்களை உரைநடைப் பக்கம் வரவிடாமக் கெடுத்துக்கிட்டு இருக்கு. இதனால கவிதைகளைத் தடை பண்ணணும்னு சொன்னேன். உரைநடை உலகத்தின் சர்வவிரோதி, இந்தக் கவிதைத் தமிழ்தான். மத்தபடி தமிழ்க் கவிதைகளுக்கு நான் ஒண்ணும் எதிரி கிடையாது.’’


தமிழ்ச் சிறுகதை வடிவங்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?


``தமிழ்ல சிறுகதைங்கிற வடிவமே காலாவதியாகி ரொம்ப நாளாச்சே. இப்போ வந்து இந்தக் கேள்வியைக் கேட்கறீங்க. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்’னு நாம கதைகளை ஆரம்பிப்போம். ஆனால், தமிழ்ல சிறுகதைகள் வந்தப்போ “இதென்ன ஆரம்பமும் இல்லாம முடிவும் இல்லாம. இது எப்படிக் கதை ஆகும்?”னு கேட்டாங்க. அப்புறம் மாப்பசன், ஆன்டன் செக்காவ்... அமெரிக்கச் சிறுகதைகளைப் படிச்சோம். ஓகோ... சிறுகதைகள்னா இப்படித்தான் இருக்கணும்போலனு எழுத ஆரம்பிச்சோம். முதல்ல சிறுகதை முயற்சியை பாரதிதான் செஞ்சார். ஆனா, அது சரியா வரலை. ஆனாலும் முயற்சி செய்தார். ஆக, முதல் சுழி பாரதி போட்டது. ரெண்டாவது சுழி வ.வே.சு.ஐயர் போட்டார். அதுல கொஞ்சம் ஜெயமும் அடைஞ்சார். அப்போ பிராமணர்கள்தானே படிச்சாங்க. இதுதான் வடிவம்... அதோ பார் வடிவம்னு எதையும் சொல்லிட முடியாது. ஒரு கதையைபத்து பேர்கிட்ட கொடுத்து, `எழுதிட்டு வா’னு சொன்னா, பத்துவிதமான வடிவங்கள் கிடைக்குதுல்லா... அதுதான் சிறுகதைக்கான வடிவம். அதிலிருந்து கிளைச்சு வருது பாருங்க, அதுதான் இப்போ வடிவம். என் ‘கதவு’ கதையை எடுத்துக்கிட்டு இப்பவும் வாத்தியார் அனுப்பினாங்கன்னு சொல்லி ஆய்வு மாணவர்கள் என்கிட்ட வருவாங்க. அந்த வாத்தியார்கள்கிட்ட, ` ‘கதவு’ கதையோட வடிவம், அது இதுன்னு எல்லாம் மாறிப்போச்சே. இப்போ போய் எதுக்கு அதைச் சொல்றீங்க?’னு கேட்டா... `அதைச் சொல்லக்கூடாதுல்லா’னு சிரிப்பாங்க. நானும் சிரிச்சுக்குவேன்.’’


கோணங்கியின் ஆரம்பகால எழுத்துக்கும் இப்போ எழுதறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கே... இதை எப்படிப் பார்க்கறீங்க?


“இதே மாதிரியான விஷயங்கள் சித்திரக்காரர்களுக்கும் உண்டு. ஆரம்பத்துல ஆதிமூலம் கோட்டோவியங்கள் வரைஞ்சுட்டு இருந்தார். அப்புறம் மாய உலகத்தை வரைய ஆரம்பிச்சுட்டார். அவர்கிட்ட, ‘எழுத்தாளர்கள்ல மாக்ஸிம் கார்க்கி, ஆன்டன் செக்காவ், டால்ஸ்டாய் மாதிரி நீங்களும் உங்க சைல்டுஹுட் பற்றி வரையலாமேன்’னு சொன்னேன். ‘ஆமா நல்ல யோசனை, முந்தியே செஞ்சிருக்கலாம். ஆனா, இப்போ நான் கோட்டுச் சித்திரங்களை விட்டுட்டேன். இப்போ அதை நான் வரைய முடியாது’ன்னு சொன்னார். அப்படி வடிவங்கள் மாறுறது சகஜம்தான்.”


500 பக்கங்கள், 1,000 பக்கங்கள்னு பெருசா எழுதப்படுற நாவல்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?


``அதை வாசகன் முழுசாவெல்லாம் படிக்க மாட்டான்கிறது என் எண்ணம். 1,000 பக்கம்னு மலைச்சுக்கிட்டே இருப்பான். ஒருத்தன் 40-ம் பக்கத்துலேர்ந்து ஆரம்பிப்பான். இன்னொருத்தன் 110-ம் பக்கத்துலேர்ந்து ஆரம்பிப்பான்... அவங்களுக்கு அங்க கதை பிடிச்சிருந்தா, அங்கிருந்து நூல் பிடிச்சுட்டுப் போறது போல போய், ஒரு வசதியான இடத்துல நிறுத்திக்குவாங்கனுதான் தோணுது. ஒரு சிறுகதைத் தொகுப்புல நாம ஒண்ணு ரெண்டுன்னு கதைகளை வரிசையாவா படிக்குறோம். ஒருத்தன் கடைசி கதையில் ஆரம்பிப்பான். இன்னொருத்தன் நடுவுல உள்ள கதையைப் படிப்பான். அநேகம் பேர் முதல் கதையைப் படிக்கிறது இல்ல. அப்புறம் இப்போ நாவல் வடிவங்களும் மாறிப்போச்சு. எல்லோரும் இப்போ படிக்க சுவாரஸ்யமா இருக்கணும்னு சொல்றாங்க. என்னமோ தேவைப்படுது. அது இருந்தா போதும்னு நினைக்கிறாங்க.”


உங்களுக்குப் பிடிச்ச கரிசல் எழுத்தாளர்கள் பத்தி சொல்லுங்க?


``பக்தன்கிட்ட போய் ‘எந்தக் கடவுள் உங்களுக்குப் பிடிச்ச கடவுள்?’னு கேட்டா, அவன் என்னத்தச்் சொல்லுவான். தவிர, இந்தப் பட்டியல் போடுறதெல்லாம் பழைய பழக்கமப்பா. யாராவது ரெண்டு பேரைச் சொல்லி, நாலு பேரை விட்டுட்டா `என்னை நீங்க சொல்லலை’ன்னு வருத்தப்படுவாங்க. எதுக்கு அது? இப்போ நான் எதையும் சொல்லாம இருக்கிறதுதான் எனக்கு மரியாதை. பலபேர் நம்முடைய ஆட்கள்தான். ‘என் மக்களே...’னு இங்கிருந்தே அவர்களைத் தடவிக் கொடுக்கிறேன், பிரியமாக.”


`கதைசொல்லி’ பத்திரிகை என்று சொன்னதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வருது?


``எல்லாருக்கும் பால்யகால ஞாபகங்கள் மிக முக்கியமானதா இருக்கும். எனக்கு பால்யகால நினைவுகளைவிட மிக முக்கியமான நினைவுகள்னா அது ‘கதைசொல்லி’ இதழை ஆரம்பிச்சு, நடத்திக்கிட்டிருக்கிறதுதான். ஆமாம்... அப்படித்தான் சொல்லணும்.’’


பிரிட்டிஷ் இந்தியா, சுதந்திர இந்தியா ரெண்டையும் பார்த்த குடிமகன் நீங்க... இந்தியா மேப்பை (வரைபடத்தை) எப்போ முதல்முதலா பார்த்தீங்க?


``நான் பள்ளிக்கூடத்துல படிக்கிற காலகட்டத்துலேயே இந்தியா மேப் பார்த்துட்டேன். சுவத்துல ஆணி அடிச்சு மாட்டிவிட்டாங்கன்னா... மெள்ள விரிஞ்சிக்கிட்டே கீழே வரும். மாகாணங்கள் வரும். ஜில்லாக்கள் வரும். கோடுகோடுகளா வரும். பாகிஸ்தான் இல்லாத மேப்னு நினைக்கிறேன். இப்ப சின்னச்சின்ன மாற்றங்கள் வந்திருக்கு. நாட்டுல இல்லாத மாற்றம் மேப்புல வந்து என்ன ஆகப் போகுது?’’


அரசியலைக் கவனிக்கிறீங்களா?


“சுதந்தரப் போராட்ட மேடைகள்ல சுதந்தரம் கிடைச்சதும் முதல்ல கல்வியை மாத்தணும்னு சொன்னாங்க. ஆனா, மாத்தல. சுதந்தரம் கிடைச்சு இப்போ வருஷம் என்னாச்சு? எழுபது. இங்க சாராயத்த பெருசா கொண்டுவந்துட்டான். சின்ன புள்ளைங்கல்லாம் குடிச்சு மயங்குதுங்க. சினிமா மோகத்துல திரியுதுங்க. சாதிகளையும் கோயில்களையும் புதுப்பிக்கிறான். மக்களை எல்லாம் சத்தம் காட்டாதவங்களா அரசியல்வாதிகள் மாத்திட்டாங்க. ஒவ்வொரு சாதிக்காரனும் ‘நாந்தான் ஆண்ட பரம்பரை’னு சொல்லிக்கிட்டு வர்றானுங்க. இங்க எல்லாருமே ஆண்ட பரம்பரைன்னா யாரு இங்க குடியானவன்? குடியானவங்க எல்லாம் செத்துப்போயிட்டாங்களா? இனி எவனும் ‘புரட்சி ஓங்குக’னு சொல்ல மாட்டான். எல்லா போராட்ட உணர்வுகளும் மழுங்கிப்போயிருச்சு. கொஞ்சமாவது மக்களுக்குக் கோவம் வேணாமா? எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனி மக்களுக்கு கதி மோட்சம் கிடையாது. மதமும் சாதியும் புதுப்பிக்கப்படுதுனு சொன்னேன்ல, அதுதான் நடக்குது.’


அரசியல் வியாதிக்கு மருந்தே கிடையாது. சொல்லப்போனா அரசியல் வியாதிக்கு மருந்தும் அரசியல்தான். இந்திய, தமிழக அரசியலில் மட்டுமல்ல - உலக அரசியலில் இருந்தும் எனக்குத் தெரிவது, மனித ரத்தத்தை ருசித்து அனுபவித்த ஆட்கொல்லிப்புலிகளும் மனிதரைத் தேடி காட்டில் அலையும் ஓநாய்களும்தான். எறும்பைக்கூடக் கொல்ல வேண்டாம்னு சொன்ன புத்தரின் மதத்தையே தேசியமாகக் கொண்ட சிறீலங்கா, மனிதர்களைத் தேடித் தேடி வேட்டையாடிக் கொன்னதப் பாத்தோமே. இவர்களுக்கெல்லாம் அரசியல் ஒரு கேடா?


நீங்க இடதுசாரி இயக்கங்கள்ல உறுப்பினரா இருந்தவர்... இப்போ தமிழ்நாட்டுல இடதுசாரிகள் இல்லாத சட்டமன்றம் அமைஞ்சிருக்கே... இதை எப்படிப் பாக்கிறீங்க?


``பல உலக நாடுகள் நம்பிக்கையா பார்த்த சோவியத் யூனியனே உடைஞ்சுபோச்சு. கிட்டத்தட்ட 90 வருஷக் கட்டமைப்பு அது. அதையே மாறிவரும் உலகம் உடைச்சுத் தூள் தூளாக்கிருச்சே. அதுபோல சமீபத்திய விளைவுதான் இதுன்னும் சொல்லலாம். அப்புறம் இடதுசாரிகள் சட்டமன்றத்துக்குள்ள போகாததுனால ஒண்ணும் இழப்பு இல்லை; லாபமும் இல்லை.”


சோவியத் ரஷ்யா உடைஞ்ச அந்தக் காலகட்டத்தில் உங்கள் மனநிலை என்னவா இருந்தது?


“நாங்களும் உடைந்தோம். அணுகுண்டு வெடித்ததைவிட மோசம் அது என்றாலும் உண்மை.


‘முதலாளித்துவ நாட்டுக்கும் சோஷலிச நாட்டுக்கும் வித்தியாசம் என்ன?’ என்று லெனினிடம் ஒருவர் கேட்டார். ‘சோஷலிச நாட்டில் ஒரு சீப்பின் விலை 10 ரூபாயும் ஒரு சாப்பாட்டின் விலை 10 பைசாவாகவும் இருக்கும். (அங்கே ரூபிள்) முதலாளித்துவ நாட்டில், ஒரு சீப்பின் விலை 10 பைசாவாகவும் ஒரு சாப்பாட்டின் விலை 10 ரூபாயாகவும் இருக்கும்’ என்று லெனின் சொன்னார்.”


இப்போதும் இடதுசாரிகளோட தொடர்பில் இருக்கிறீர்களா?


“இடதுசாரிகளோடு தொடர்பா? தொடர்பு என்பது இரு பக்கங்களிலிருந்தும் இயங்க வேண்டும். எண்ணங்கள், சிந்தனைகள்னு கேட்டா, எந்த இடதுசாரி என்றும் கேட்கலாம். எல்லா இடதுகளும் நல்லதில்லை; எல்லா இடதுகளும் கெட்டவை இல்லை. இடதுகளில் தீவிர இடது, அதி தீவிர இடது, பயங்கர இடது, அதி பயங்கர இடது என்றெல்லாம் இருக்கின்றன. எடுத்துக்காட்டெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா பித்தம் வந்து சேரும்!. இது அப்படியே வலது சாரிகளுக்கும் பொருந்தும்.”


நீங்க கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது, சக படைப்பாளியாக ஜெயகாந்தனும் இருந்தார். அவருக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது?


“சக படைப்பாளிகளோடு என் உறவு நான் அறிந்தவரை நன்றாகவே இருந்தது. கிரித்திரியங்களையெல்லாம் அவர் மற்ற இடங்களில்தான் வைத்துக்கொள்வார். கிட்டத்தட்ட ‘அவர்களை’ அண்டவிடாமல் பார்த்துக்கொள்வார். அவர்களை நெருங்கவிட்டால், அவர்களால் நேரம் பாழாகும். தனிமையின் இனிமை போய்விடும். வெத்துப் புகழ்ச்சி, கோணல் வார்த்தைகள் வராமல் பார்த்துக்கொள்வார்.”


உங்களுக்கும் ரசிகமணிக்குமான உறவைப் பற்றி சொல்லுங்க...


``ரொம்பவும் பிராக்டிகலான மனுஷன். ஆரம்பத்துல அவருக்கு லண்டன்ல ஐ.சி.எஃப் படிக்க வாய்ப்பு வந்துச்சு. கடல் தாண்டக் கூடாதுன்னு அந்தக் காலத்துல ஒரு மூடநம்பிக்கை உண்டு. அதனால வீட்டுல எதிர்ப்பு. அப்புறம் சட்டம் படிச்சு வக்கீல் ஆனார். வக்கீல் ஆனாலும் கோர்ட்டுக்குப் போய் வாதாடாம, கம்ப ராமாயணம் படிச்சு, கவிதைகளின் ரசிகர் ஆனார். அதனாலதான் அவர் ரசிகமணி டி.கே.சி. கூடவும் வாழ்வியல் ரசிகர்.”


இலக்கியம் சோறு போடும்னு நினைக்கிறீங்களா?


``போடும்... நான் சாப்பிட்டிருக்கேன்.’’


ஒரு சமூகத்துக்குக் கதைசொல்லி எவ்வளவு முக்கியம்னு நெனைக்கிறீங்க?


``கதைசொல்லியை எழுத்தாளரா ஏத்துக்காத ஒரு காலம் இருந்துச்சு. கதையில எல்லாமும் இருக்குங்கிற ஞானம் இப்போ இருக்கிற தலைமுறைக்கு இல்லை. நம்முடைய மரபுல எல்லா விஷயங்களையும் கதையாவும் பாட்டாவும்தான் சொல்லிக்கொடுத்தாங்க. இப்போ கதை சொல்ல பெத்தவங்களுக்கு நேரமில்லை. கதை சொல்ற தாத்தாவும் பாட்டியும் வயோதிகர்கள் இல்லத்துல இருக்கிறாங்க. பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கு. கதையே கேட்காத, கதை கேட்டுத் தூங்காத ஒரு தலைமுறை உருவாகிருச்சு. அவசரங்கள் எல்லாத்தையும் கபளீகரம் பண்ணிருச்சு. இதுலேருந்தெல்லாம் விடுவிச்சு மனித மனசுக்கு வைத்தியம் செய்யணும்னா அத கதைகளால மட்டும்தான் பண்ண முடியும்.”


நீங்க எழுத்தாளரா இல்லைன்னா என்னாவாகியிருப்பீங்க?


``முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாம போயிருப்பேன். (வாய்விட்டுச் சிரிக்கிறார்) இல்லைன்னா, ஏதாவது ஒரு சங்கீத வித்வானா மாறியிருப்பேன். நான் என்பது முக்கால் பங்கு சங்கீதம்; கால் பங்குதான் இலக்கியம். ஒரு காத்து அடிச்சுக்கொண்டு வந்து என்னை இலக்கியம் பக்கம் நிறுத்தியிருச்சு. வயலின் கத்துக்க ஆசைப்பட்டு படிச்சேன். அதைத் தொடர முடியாமப்போயிருச்சு. பாட்டு கத்துக்கணும்னு நினைச்சேன். அதுவும் முடியலை. ஒரு கைதி ஜன்னல் வழியா தெரியிற ஆகாயத்தைப் பார்ப்பானில்லையா? அப்படி நான் இலக்கிய உலகத்துலேர்ந்து சங்கீதத்தைப் பார்க்கிறேன். ’’


எந்தக் கருவி இசை மிகவும் பிடிக்கும்?


“நாயனம். ஆனால் கேட்பதற்குத்தான் வாய்ப்பில்ல. முன்பெல்லாம் ரேடியோ செட் போடுகிறவர்கள் தொடக்கமாக நாதஸ்வர இசை போடுவார்கள். இப்போ அவர்களும் போடுறதில்ல.”


ஆடுகளத்தில இருந்து வெளியேறிட்டதா என்னைக்காவது நெனைச்சிருக்கீங்களா?


“இல்ல.”


யாருக்காவது கடிதங்கள் எழுதுகிறீர்களா..?


“நினைக்கும்போது பெருமூச்சுவிடத் தோணுது. என்னுடைய மரத்தில் முதல் காய்ப்பே கடிதங்கள்தான். முறையான எழுத்துப் பயிற்சி கிடையாது. ‘ழ’கர, ‘ள’கர, ‘ர’கர, ‘ற’கர மயக்கங்கள், ஒற்றுப்பிழைகள், வார்த்தை, வாக்கியப் பிழைகள் என ‘கோதண்டம்’ போன்ற தண்டனைகள் தரத்தக்க குற்றங்கள் கொண்டவன் அடியேன். இப்பேர்ப்பட்ட ‘நிரட்சரகுட்சி’-க்கு ஒரு மத்திய அரசு சுதந்திரப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியர் பதவி தந்தார்களே, என்ன சொல்ல? இங்கே உள்ள தமிழ்ப் பேரறிஞர்கள் கடுமையாக என்னை எதிர்த்ததில் என்ன தப்பு? ஆனாலும், எனது கடிதங்களுக்கு நண்பர்கள் மத்தியில் தனி மவுசு இருந்தது ஒரு ஆச்சர்யம்தான்.”


வசவுகளைப் பற்றி் சொல்லுங்க...?


“வட்டாரந்தோறும் வசவுகள் மாறும். வசவு என்று தெரியாமல் அதைச் சர்வசாதாரணமாக பயன்படுத்துகிறவர்களும் உண்டு. வசவுகள் எல்லாம் கெட்ட வார்த்தையில்தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. ‘அட, எம் எழவு கொடுப்பா; விளையாடுறியா?’ என்று கொஞ்சும் பாட்டிகள் உண்டு. ‘இழவு’ என்பது அவச்சொல் அல்லவா. பச்சைக் குழந்தையிடம் இதைச் சொல்லிக் கொஞ்சுவதா என்று தோன்றும். மனிதனுக்கு மனநெருக்கம் அதிகப்படப்பட, ஆபாசம் பாசமாகிவிடும்; கலவியின்போது பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதை தாளில் எழுதிக்காட்ட முடியாது.”


சினிமாவுக்கும் உங்களுக்குமான தொடர்பு ...


‘முதல் மரியாதை’ விஷயம் எல்லாருக்கும் தெரியும். கே.பாலசந்தரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்துக்கு எனது வட்டார வழக்குச் சொல் அகராதி, வசனம் எழுதப் பயன்பட்டது என்று டைட்டிலிலேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு படத்தில் என் தலையைக் காட்டவைத்தது நண்பர் தங்கர்பச்சான் புண்ணியம். இவைபோக, எனது எழுத்துக்களில் வந்த காட்சிகள், வசனங்கள் எத்தனையோ? அவை பற்றி எனக்கு எந்தவித வருத்தமும் கிடையாது. தாகம் இருப்பவர்கள் தண்ணீர் குடிக்கிறார்கள், குளம் வற்றிவிடாது.”


இப்போ சினிமா பார்ப்பது உண்டா?


“சினிமா கொட்டகைக்குள் போய் மிகப்பல வருடங்கள் ஆகிவிட்டன. முக்கியமாக, கொட்டகையினுள் சினிமா போடும் பேக்கூப்பாடு எனக்கு ஒவ்வாமையாகிவிட்டது. இந்தப் பேரோசையை இன்னும் யாரும் உணர்ந்ததாகத் தெரியலை. படுகாரமாகத் தின்பவருக்கு அவ்வளவு காரம் இருக்கணும். போகிறவர்கள் போங்க. ஆரம்பகாலத்தில் கே.பாலசந்தர் படங்கள் பார்த்தேன். அதைவிட்டு நகர்ந்து சாந்தாராம். அதன் பிறகு சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், ஈரானியப் படங்கள். இப்போது சிறுபத்திரிகைகள்போல வரும் நம்முடைய பையன்கள் எடுக்கும் அருமையான படங்கள்.”


நீங்கள் உணவுப் பிரியர் என்று கேள்விப்பட்டிருக்கோம். உணவுகள்் மீதான இந்த ஆர்வம் எப்போது ஏற்பட்டது?


“யார்தான் உணவுப் பிரியர் இல்லை?! ஒரு வேலையும் இல்லாமல் யானையைப் போல தின்றுகொண்டே இருக்கும் நபர்களெல்லாம், `சரியான தின்னிமாடன்’ என்று பட்டப்பெயரில் அழைக்கப்படுவார்கள். அப்படி வாழ்ந்துகொண்டிருந்த தண்டச்சோறன் நான். விதவிதமாகச் சமைக்கச் சொல்லி ருசித்துத் தின்றுகொண்டே இருப்பதுவும் ஒரு வாழ்வா? ஒருவனுடைய ஆயுள் இத்தனை வருடம் என்று கிடையாதாம்; இவ்வளவு எடை உணவு என்றுதான் இருக்கிறதாம். அதை அவன் 20 ஆண்டுகளிலேயே தின்று முடித்துவிட்டால், அதுதான் அவன் ஆயுளாம். 100 வருஷம் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றால், அதுதான் அவனுடைய ஆயுசாம்.”


நீங்க மது குடித்தது உண்டா?


“ஒரே ஒரு முறை தொட்டு, நாக்குல வெச்சுப்பார்த்தேன். பிடிக்கலை. விட்டுட்டேன். எங்க ஊர்ல பிரசவ நேரத்துல பெண்களுக்கு வலி தெரியாம இருக்க சாராயம் கொடுப்பாங்க. நானே போயி வாங்கிட்டு வந்திருக்கேன். அவ்வளவுதான் மதுவுக்கும் எனக்குமான உறவு.”


நீங்கள் வெளியில் கிளம்பும்போது, பட்டு வேட்டி பட்டுச் சட்டை, ஜரிகை அங்கவஸ்திரம் அணிந்துதான் கிளம்புவீர்கள் என்கிறார்கள். எப்போ இருந்து இந்த வழக்கம்?


“அது ஒரு காலம். சுத்தமான அசல் பட்டுகள் கிடைத்துக்கொண்டிருந்த காலம். பட்டு உடுத்திப் பழகிவிட்டால், வேற துணிகள் எதுவும் பிடிக்காது. அதேபோல் சுத்தமான அசல் பருத்தி உடைகள் உடுத்திப் பழகிவிட்டாலும் வேற துணிகள் பிடிக்காது. அந்தக் காலத்தில் ‘காதி’, கதர் கடைகளில் கோவில்பட்டியில் கிடைத்த காலம். அந்தப் பழக்கத்தில் இப்பவும் கல்யாணங்கள், விழாக்கள் என்று புறப்பட்டால், அணிந்து போகிறதுதான். 90-ம் வயது பிறந்தது. இனி சட்டைகூட வேண்டாம் என்று தோன்றி விட்டது. வெள்ளைக் கைலி மட்டுமே இப்போதும்.”


இடைசெவலுக்குத் திரும்பிப்போக வேண்டும் என்று தோன்றியது இல்லையா?


“29 வருஷமாச்சு. ஒரு தடவைதான் போயிருக்கேன். நான் பேசிப் பழக எங்காலத்து மனுஷங்க பலரும் இப்ப இல்ல.”


கண்ணீர் என்றதும் நினைவுக்கு வருவது...?


“குழந்தைகளின்... பெண்களின் கண்ணீர்! சட்டுன்னு பதில் சொல்லிட்டேன். சரியாச் சொல்லிட்டனான்னு மனசு யோசிக்குது.”


எந்த விஷயம் இல்லாமல் கி.ரா இல்லை?


“உயிர்தான். வேறென்ன?!’’


(வாய்விட்டுச் சிரிக்கிறார்

448 views

Comments


bottom of page