top of page

அழிந்து போன நந்தவனம்

னி பள்ளிக்கூடம் இல்லை எனக்கு என்று தீர்ந்தது. மேல்க்கொண்டு என்ன செய்ய என்ற கவலை இல்லை. வடக்குக் குளத்தில் தண்ணீர் வற்றிப் போய்விட்டால் நந்தவனத்துக் கிணறு இருக்கிறது குதித்து நீச்சல் அடித்து விளையாட. ஊருக்கு வடகிழக்கு மூலையில் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் எங்கள் அப்பா அமைத்த நந்தவனம் அது. அதைப் பார்த்துப் பராமரிக்க ஒரு குடும்பத்தாரை ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் குடும்பத்தைத் தனது இளம்தோளில் தாங்கும் உத்திரம் ஆக வேண்டியதாகிவிட்டது எனது பாலியக் கால நண்பன் சத்திவேலுவுக்கு. ஆறாவது வகுப்புவரை என்னோடு வகுப்புத் தோழனாக இருந்தவன். அவனுடைய கூரைமண் வீட்டைக் கடந்துதான் குறுக்குப்பாதையாக நான் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டும். காளியம்மன் கோயில், பார்வதியம்மன் கோயில் ரெண்டையும் கடக்கும்போது ஏதாவது ஒரு கோயிலினுள் அவன் இருப்பான். அவனுடைய தாத்தா முத்தையாப் புலவர்தான் அந்தக் கோயில்களின் பூசாரி. அந்த முத்தையாப் புலவரின் மூன்றாவது மகளைத்தான் காருகுறிச்சி அருணாசலத்துக்குக் கட்டிக் கொடுத்திருந்தது; முதல் தாரமாக. காருகுறிச்சியும் இப்படித்தான் எனது பாலியகால சகாவாக ஆனது.


நான் பள்ளிக்கூடத்துக்கு ஒருநாள் வந்துகொண்டிருந்தபோது சத்திவேல் வீட்டினுள் பெண்களின் அழுகைக்குரல் பலமாகக் கேட்டது. முத்தையாப் புலவர் திடீரென்று இறந்து போய்விட்டதாக வீட்டின் முன் கூடியிருந்த கூட்டத்திலிருந்த ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன். அதுக்குப் பிறகு அந்தக் கோயில்களின் பூசாரியாக சத்திவேல்தான் இருந்தான்.

எனது வாசகர்களுக்கு இந்த சத்திவேல் என்பவன் யார் என்பது ஓரளவு புரிந்திருக்கும்! “பிஞ்சுகள்” குறுநாவலில் வருகிற செந்திவேல்தான் இந்த சக்திவேல். சத்திவேலின் அப்பாவும் சித்தப்பாவும் நாகஸ்வர வித்வான்கள். அடுத்த சித்தப்பா தவில் வித்வான். இந்தக் குடும்பத்தில் பொண் எடுத்த காருகுறிச்சியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இப்படி ஒரு இசை வாழ்ந்த குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த சத்திவேலுவுக்கு இசை அந்நியமாகிவிட்டது. ரெண்டு கோயில்களுக்கும் பூசை செய்வது, நந்தவனத்துப் பூச்செடிகளுக்கும் பச்சிலைக் கொடி செடிகளுக்கும் திலாப் பிடித்து தண்ணீர் பாய்ச்சுவது. இதுபோக களை செதுக்க உரம்வைக்க என்று அங்கே ஏதாவது செய்து கொண்டிருப்பான். முக்கியமாக நந்தவனத்துக்குள்ளே பெண்களும் பெண்பிள்ளைகளும் நுழைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளணும். இதுக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படும். பூக்கள் பேரில் அவர்களுக்கு உள்ள தாங்க முடியாத பிரியம்; மற்றது “தீண்டல்” வந்த பெண்வாடை பூச்செடிகளுக்கு ஒவ்வாமை என்பது.


நந்தவனத்துப் பூச்செடிகளே கதி என்று கிடந்த சத்திவேலைப் பார்க்க நாங்கள்தான் அங்கெ போகணும். “எப்பா, பூந்தோட்டக் காவக்க்காரா” என்று சொல்லிக்கொண்டே அங்கே வருவார் சீனி நாயக்கார். எங்கள் “சங்கத்தில்” இவரும் ஒரு சந்தா இல்லாத அங்கத்தினர். அவர் வீட்டுக்குச் சாப்பிட மட்டும் போவார். மற்ற முக்கால்வாசி நேரம் எங்களோடதான். அவருடைய வாய் எங்களோட பேசும்; பீடி குடிக்கும்; மற்ற நேரங்களிலெல்லாம் ராகங்கள் இசைத்துக் கொண்டே இருக்கும்.


என்னையும் சேர்த்து சதா ஒரு “வெட்டிக் கூட்டம்” எப்போது பார்த்தாலும் இருந்துகொண்டே இருக்கும். என்னுடைய தகப்பனார் காலமானதும் அவர் இன்ஷ்யூர் செய்த கம்பெனியிலிருந்து ஒரு தொகை வந்தது. அதை வாங்கி எனது பாட்டி ஒரு புது வீடு கட்டினாள். அந்த வீட்டில்தான் எங்கள் ஜாகை. ஊர்சுற்றுகிற நேரம் போக மற்ற நேரங்களிலெல்லாம் எங்களை அங்கேதான் பார்க்கலாம். அந்த வீட்டிற்கு விளாத்திகுளம் சாமிகள் வைத்த செல்லப்பெயர் “சங்கீத மகால்”. சாமிகள் வந்தால் அங்கே என்னோடு ஒருவாரம் பத்துநாள் என்று தங்குவார். பாட்டு, சாப்பாடு, தூக்கம் என்று பொழுது கழியும். காருகுறிச்சி அருணாசலம் வந்தாலும் அதேவீட்டில் என்னோடு தங்கியிருப்பார். நாயனத்தில் எப்படி வாசிப்பாரோ அதேபோல் அவர் பிரமாதமாகப் பாடுவார். அவருடைய குருநாதர் ராஜரத்தினம் அவர்களும் அதே போல்த்தான். ராஜரத்தினத்தின் கண்டத்திலிருந்து வெளிப்படும் அந்த இசைக்குரலைக் கேட்கும் போதெல்லாம் கு.அழகிரிசாமி சொல்லுவான். ஒரு சங்கிலிருந்து வெளிவரும் நாதம்போல் ஒலிக்கிறது அவருடைய வாய்ப்பாட்டுக் குரல் என்று.


இந்தக் குரலில் மயங்கிய ஒருத்தர் ராஜரத்தினத்தைக் கதாநாயகனாக வைத்து ஒரு சினிமாப் படம் “கவி காளமேகம்”(?) என்று எடுத்தார். அதில் ராஜரத்தினம் பாடிய பாடல்கள் இசைத் தட்டாகவும் வெளிவந்தன. சத்திவேலின் அப்பா, சித்தப்பா இவர்கள் தங்கள் பூர்வீக ஊரான குருமலை கிராமத்தில்தான் இருந்து வந்தார்கள். இடைசெவலில் நடக்கும் திருவிழா, கல்யாண விசேசங்களுக்கு வாசிக்க வரும்போது மட்டும் இங்கே தங்கிச் செல்வார்கள்.


பின் நாட்களில் நான் சத்திவேலின் சித்தப்பாவான குருமலை பொன்னுசாமி பிள்ளை அவர்களைக் குடும்பத்துடன் இங்கே வரவழைத்து ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து, சில காலம் அவரிடம் முறையாக இசை பயின்றேன். என்னோடு கு.அ.வையும் (எழுத்தாளர் கு.அழகிரிசாமி) சேர்த்துக் கொண்டேன். சீனிநாயக்கரும் சேர்ந்து கொள்வார். காலம் ஒரும்பாக ஆக மக்களை ஏழ்மை பிடித்து வாட்டியது. தொடர்ந்து வானம் பொய்த்தது. பட்டினியால் மக்கள் செத்தார்கள். மனிதருக்கே தண்ணீர் இல்லை; பூச்செடிகளுக்கு எங்கே போக. பக்தர்களோடு சேர்ந்து கோயில்ச் சாமிகளும் ‘பட்டினி’ கிடந்தன.


இதற்கு முன்னதாக, கோயில் வருமானமும் நந்தவனத்தில் பூக்கள் மூலம் கிடைத்த வருமானமும் சேர்ந்தாலும் சத்திவேல் குடும்பத்துக்குக் காணாததால் அவன் சித்தாள் வேலைக்குப் போய் வந்தான். அவன் படும் பாதரவு மனசை வாட்டியது. என்னைப் போல் அவனுக்கும் ஒரு சில கனவுகள் இருந்தது. அவனுடைய ஆசையெல்லாம் திருவாடுதுறை ராஜரத்தினம் போல நாயனம் வாசித்துப் பேர் எடுக்க வேண்டும் என்பதே. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாயனத்தில் சாதகம் செய்வான். அந்த நாயனத்தை நான்தான் அவனுக்கு வாங்கப் பணம் தந்தேன்.


ஒரு நாள் அவன் ரொம்ப வருத்தத்தோடு இருந்தான். என்ன என்று கேட்டதற்கு நாயனத்தை அப்பா எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றான். அப்பா நாயனத்தை அப்பா கொண்டு போனார்; உனக்கென்ன என்றேன். எவ்வளவு பிரியமா வச்சிருந்தேன்; அப்பா எனக்கொரு நாயனம் தரப்படாதா என்றான். அவர்கள் நிலையில் ஒரு நாயனம் வாங்க முடியாதுதான். நான் முதலில் ஒரு ஹார்மோனியம் வாங்கினேன். அதன் பிறகு ஒரு நாயனம் வாங்க சத்திவேலுக்குப் பணம் தந்தேன். மதுரைக்குப் போய் வாங்கி வந்தான். அந்தச் சமயத்தில்தான் நாயனத்தின் வடிவமே மாறியிருந்தது. அதுக்கு முன்பெல்லாம் ‘திமிறி’ என்கிற முக்கால் முழம் நீளமுள்ள வெங்கல அணசு பொருத்திய நாயனம்தான் உண்டு. நாயனத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவரே திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளைவாள்தான். அயிரை மீனைப் போல இருந்த திமிறி வாத்தியம் விலாங்கு மீனைப் போல நீண்ட ‘பாரி’ வாத்தியமாகியது. இதன் கம்பீரமான குரலைக் கேட்டவர் மயங்கினர்.


அந்தச் சமயத்தில் ராஜரத்தினத்திடம் காருகுறிச்சி அருணாசலம் திருவாடுதுறையில் “குரு குலவாசம்” பண்ணிக்கொண்டிருந்தார். குருவுக்கு காருகுறிச்சி செய்த பணிவிடைகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறேன். அது அப்படி இருக்க, இப்போது காருகுறிச்சியாரிடமிருந்து சத்திவேலுவுக்கு ஒரு அவசரச் செய்தி வந்தது. அதன்படி, ‘ராஜரத்தினம் வீட்டுக்கு ஒரு நல்ல வேலையாள் தேவை. சத்திவேல் வந்தால் நல்லது.’

சத்திவேல் உட்பட எங்கள் எல்லோருக்கும் சந்தோசம். உடனே புறப்பட்டுப் போ என்று சத்திவேலை அனுப்பி வைத்தோம். சில வருசங்கள் சத்திவேல் ராஜரத்தினம் வீட்டில் இருந்ததால், அவன் இங்கே இடைசெவலுக்கு வரும்போதெல்லாம் நான் அவனிடம் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்ட செய்திகள் ஏராளம். அவைகளையும் அதோடு நானே அறிந்து கொண்ட பல செய்திகளையும் இங்கே சொல்கிறேன்.


திமிறி நாயனத்தின் ஒத்துச்சத்தமே – அதன் எச்சான ஒலி – மிக அருகில் நின்று கேட்க ராஜரத்தினம் சங்கடப்படுவதாக நான் உணர்ந்தது, கோவில்பட்டியில் அவர் வாசிக்க வந்த ஒரு திருவிழா ஊர்வலத்தின் போதுதான். ஒத்துவாசிப்பவனை, தள்ளிப் போய் நில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இது நடந்து பல நாட்களுக்குப் பிறகு ராஜரத்தினம் பல வகைப்பட்ட நாயனங்களை வைத்து வாசிப்பதாகக் கேள்விப்பட்டேன்.


இப்போது அமலில் இருக்கும் பாரியை அவர் வடிவமைக்கப் பட்டபாடு மிக அதிகம்.

“எப்பப் பார்த்தாலும் வீட்டில் ஒரு ஆசாரியரைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு ஆறிய ஆச்சா மரங்களில் வெவ்வேறு வித விதமாக நாயனங்களைப் பல்வேறு அளவுகளில் கடைந்து செய்து பார்த்து, அதை வாசித்துப் பார்த்து, இப்படி செய்து கொண்டேயிருப்பார்.” நாயனத்தில் – சுரத்துக்கு ஒரு துளைதான் உண்டு. பிரதிமத்திம ராகங்களையும் சுத்த மத்திம ராகங்களையும் வாசிக்க இரு மத்திமங்களுக்கும் தனித்தனியாகத் துளைகள் இருப்பது அவசியம் என்று ராஜரத்தினம் கருதினார். சுருதி சுத்தமாக வாசிக்க வேண்டுமென்றால் இது மிக அவசியம் என்றார். “ஆசாரி பாடு ரொம்ப லத்தாடிட்டது; துளைகள் போட்டுப் போட்டு, ஊதிப் பாத்துப் பாத்து, ரொம்ப நாயனங்கள் வீணாப் போச்சி. கடோசியில் ஒண்ணு அமைஞ்சது. ரொம்ப சத்தமா அமைஞ்சிட்டது. ஆனா அதுலயும் ஒரு சங்கடம் வந்து சேந்தது. அதை சரிக்கட்ட ராஜரத்தினம் ஒண்ணு பண்ணார். மெழுகு – தேன் – மெழுகு கொண்டு வரச் செய்து, பிரதிமத்திம ராகத்தை வாசிக்கும் போது சுத்த மத்திம துளையைத் தேன் மெழுகால் அடைப்பதும், சுத்தமத்திம ராகங்களை வாசிக்கும் போது பிரதிமத்திமத் துளையையும் அடைத்துக் கொண்டார்.


சீவாளி தயாரிப்பதில் ராஜரத்தினம் ரொம்ப ரொம்பக் கவனம். சத்திவேல் சொன்ன அந்த ஊரின் பெயர் எனக்கு இப்போது – இந்த கணத்தில் – ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது. காவிரி நதிக் கரையில் அந்த இடத்தில் வளர்ந்திருந்த ஒருவகை நாணல்தான் சீவாளி தயாரிக்க ரொம்ப விசேஷம். அவருடைய நாயனச் சத்தத்தின் இனிமைக்கே, அந்த ஊர் நாணலில் தயாரிக்கப்பட்ட சீவாளிதான் காரணம் என்பார்கள். குறிப்பிட்ட பருவத்தில்தான் அது கிடைக்கும். ரொம்ப கவனமாகப் பார்த்து அதை அறுவடை செய்ய வேண்டும். அந்தச் சமயத்தில் எத்தனையோ ஊர்களிலிருந்து சீவாளி நாணல் தட்டை விற்பனைக்கு வருமாம். எல்லாத்தையும் வாங்கிப் பார்ப்பாராம். அந்த ஊர் தட்டைப் போல வருமா என்று சொல்லி வாங்கிய மற்ற ஊர் நாணல் தட்டை நறுக்குகளை வீசி எறிந்து விடுவாராம். ரேகை சாஸ்திரிகள் ரேகை பார்க்க ஒரு பூதக் கண்ணாடி வைத்திருப்பார்களே அதுபோல் ராஜரத்தினத்திடம் ஒரு கண்ணாடி உண்டாம். தேர்ந்தெடுத்த நாணல் நறுக்குகளை அந்தக் கண்ணாடி வழியாகத் திருப்பித் திருப்பிப் பார்த்துத் தேர்ந்தெடுத்து, தட்டையின் ஈரம் காய்வதற்குள் ஒரு பக்கத்தை நூலால் இறுக்கிச் சுற்றி மறுபக்கத்தின் நீளத்தை அளவாக வெட்டிவிட வேண்டும். இப்போது பார்ப்பதற்குச் சிறிய தட்டையான புனல் வடிவத்தில் தெரியும் சீவாளி.


இதன் பிறகு சீவாளிக்கு துவர்ப்பு ஏற்றுதல் என்கிற முக்கியமான சடங்கு உண்டு. வாய்நிறைய வெற்றிலை எச்சிலைக் கூட்டிக் கொள்ள வேணும். வெற்றிலை போடும்போது அந்தச் சமயத்தில் மட்டும் பாக்கின் துவர்ப்புக் கூடுதலாக இருக்க வேண்டும். அப்படிக் கூடுதலான துவர்ப்பு எச்சிலைச் சீவாளியின் உள்ளும் புறமும் தோயும்படியாக, குளுகுளு என்று வெற்றிலை எச்சில் அபிசேகம் பண்ணி, அப்படிப் பண்ணிய புதிய சீவாளிகளை உலர விடுவதற்காக வீட்டு முற்றத்தில் தோரணமாகக் கட்டி விடுவாராம். நன்றக உலர்ந்தவுடன் சுத்தமான தண்ணீரில் போட்டு அலசி நாயனத்தில் சொருகி ஊதிப் பழக்குவார்களாம் சீவாளிகளை.

சத்திவேல் சொல்லுவான்: அதிகாலையில் எழுந்து நாங்கள் “பனி சாதகம்” பண்ணுவோம். அப்போது எங்களுக்கு அந்த துவர்ப்புப் பாடம் பண்ணிய சீவாளியைத் தந்து வாசிக்கச் சொல்லுவார். அதை வைத்து வாசிக்க ரொம்பச் சிரமப்படும். வாசிக்க வாசிக்கத்தான் ஒலி வசப்படும். “தம்” கொடுத்துத்தான் வாசிக்க வேண்டியதிருந்த சீவாளியில், நேரம் ஆக ஆகச் சுகமான இனிமையான ஒலி வர ஆரம்பிக்கும். அப்போது நமக்கே வாசிக்க ஆனந்தமாக இருக்கும் நாயனம். சொல்லி வச்சது போல ராஜரத்தினம் அவர்கள் வந்து, “எடு; கொண்டா அந்தச் சீவாளிய” என்று வாங்கி வைத்துக்கொண்டு இன்னொரு துவர்ப்புச் சீவாளியைத் தந்து இதைப் பழக்கு என்பார்.


இப்படியாகப் புதிய சீவாளிகளை நாங்கள் வசமாக்குவோம் என்பான். தனது வாத்தியத்தைப் பேணிப் பேணி அதன் பகுதிகளில் புதிய புதிய பரிசோதனைகள், மாறுதல்கள் செய்து பார்த்தவர் ராஜரத்தினம். ஆரம்ப காலத்தில் அவருடைய “சேட்டை”களைப் பார்த்து, கேள்விப்பட்டு பரிகாசம் செய்து கொண்டிருந்தது நாகஸ்வர உலகம். அப்போதெல்லாம் நாயனக்காரர் ராகம் வாசித்துக் கொண்டிருக்கும்போதே தவில்காரரும் மத்தியில் மத்தியில் “தட்டுவது” என்கிற பழக்கம் இருந்தது. இதை அடியோடு நிறுத்தியவர் ராஜரத்தினம்தான். ராகம் வாசித்துக் கொண்டே வரும்போது இடைநிறுத்தம் வரும். அப்போதுதான் தவில் வாசிக்க வேண்டும் என்ற புதிய பழக்கத்தைக் கொண்டு வந்தார்.


அந்தக் காலத்துப் பெரியவர்கள் வாசித்த நாகஸ்வர இசைத் தட்டுகளைக் கேட்டுப் பார்க்கிறவர்களுக்கு இது புரியும். ஆரம்பகாலத்து ராஜரத்தினத்தின் இசைத் தட்டுகளில் ஒன்றிரெண்டு இசைத் தட்டுகளிலும் கூட இந்தப் “பிழை” உண்டு. இந்தப் “பிழை” குறித்து இரு வேறு கருத்துகள் உண்டு. இசைத்துறையில் பூர்வீகம் தொட்டு பெரியர்வகள் கடைபிடித்து வந்ததைப் பிழை என்று தள்ளலாமா?


பிரமாதமாக வாசிக்கிற போது ஆஹ, பலே என்பது போலத் தட்டினால் பரவாயில்லை நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் போல. எல்லாத் தவில்காரர்களும் நீடாமங்கலம் ஆகிவிட முடியாதே. அதனால் சப்சாடாக நிறுத்து என்று நாகஸ்வரச் சக்கரவர்த்தியின் ஆணையாக நிலைத்து விட்டது. இந்த ஆணை எழுத்து வடிவமாகவோ சொல் வடிவமாகவோ ஏற்படுவில்லை வெறும் ஒரு கண்பார்வையிலேயே பிறப்பித்துவிட்டார் ராஜரத்தினம்.அறிந்தவர்களே அறிவார்கள் இதை; கண்களாலேயே அற்புதமாக விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள் நாகஸ்வரக் குழுவிலுள்ள அத்தனை பேர்களும். நிகழ்கலைக் கலையாளர்கள் அத்தனை பேர்களுக்குமே இது கைவரப்பெற்றதுதான் என்றாலும் நாகஸ்வரக் குழுவிலுள்ளவர்களின் நயனமொழி, கண்டு அனுபவிக்கத்தக்கது.

‘வந்துட்டான்பார்’ என்கிறார் பக்க நாயனக்காரரிடம் கண் ஜாடையால். பத்திரிகைகளில் இசையாளர்களைப் பற்றி ‘வாங்கு வாங்’கென்று வாங்குகிறவர் அப்பதான் வந்து உட்காருகிறார் என்பது இது. எங்கே கச்சேரி நடந்தாலும் தவறாமல் வந்து விடும் ஒரு குண்டு ரசிகையைக் கண்ணாலேயே அடையாளம் காட்டுகிறார் பக்க நாயனக்காரர். ஒத்துக்காரரைத் திரும்பிப் பார்த்தால் அதுக்கு ஒரு அர்த்தம், தவில்காரரைப் பார்த்தால் ஒரு அர்த்தம், இப்படி வார்த்தைகள் கண் வழி கண்ணுக்குள் போவது ரசமாக இருக்கும்.


நாயனம் வாசித்துக் கொண்டிருக்கும் போதே பக்க நாயனக்காரரைப் பார்த்து கண்ணடிப்பார் தில்லானா மோகனாம்பாளில் சிவாஜி! வில் வண்டியிலிருந்து நாயகி இறங்கி வருவதை. ஜாகைகளில் இவர்கள் சங்கீத மொழியிலேயே லவ்கீகம் பேசுவது ஒரு அழகு. மற்ற நாயனக்காரர்கள் அந்தக் காலத்தில் கச்சேரியில் வந்து உட்கார்ந்து கொண்ட பிறகுதான் சீவாளி சரியாக நனைந்து விட்டதா என்று பார்க்க, பீ, பீ என்று ‘சீட்டி’ அடிப்பார்கள். ராஜரத்தினம் இப்படிச் செய்வதை நான் பார்த்ததே இல்லை.


ஜாகையிலேயே சரி பார்த்து நாயனத்தைக் கழுவித்துடைத்து சீவாளிகளையெல்லாம் நனைத்து, மேல் ஸ்தாயையில் வாசிக்கப் போகும் சீவாளிகளுக்கு முன்புறமும் கீழ் ஸ்தாயையில் வாசிக்க சீவாளியின் அடிப்புறத்திலும் குச்சிகளை (இந்தக் ‘குச்சி’கள் யானைத் தந்தத்தினால் ஆனவை) சொருகி வைத்து விடுவார். கச்சேரியில் வந்து அமர்ந்ததும் ஒத்துவின் ‘கும்’ என்ற ஒலி பரவியதும் தவிலின் எடுப்பான முன்னுரை வாசிப்பு முடியவும்; அதற்குள் ராஜரத்தினம் பதமான சீவாளியை வாய் அமுதத்தினால் நனைத்து நாயனத்தில் சொருகி வாசிக்க ஆரம்பித்துவிடுவார்.


நமக்கு ஏற்கனவே அறிமுகமான ராகங்களை வித்தியாசமான புதிய வடிவங்களில் வழங்கியவர்கள் நான் அறிய மூன்று பேர்.

1. விளாத்திகுளம் சாமிகள்,

2. திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம்,

3. மாலி என்ற டி.ஆர்.மகாலிங்கம்.

ராஜரத்தினம் தோடி ராக ஆலாபனை இசைத் தட்டில் முதலில் வந்தபோது கர்நாடக இசை உலகமே அதைக் கேட்டுக் கேட்டு வியப்பும் ஆனந்தமும் கொண்டது. அதுவரை தோடியை அப்படி யாரும் வழங்கியதில்லை.


அந்த இசைத்தட்டுப் பதிவின் போது நடந்த நடப்பை அங்கே அப்போது உடன் இருந்த மற்றவர் வியந்து சொன்னது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. ஒத்திகை என்ற பேரில் முதலில் வாசித்த தோடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. அதுவே ‘ஓகே’ ஆகி ஒலிப்பதிவு தொடங்கியது. இப்போது வாசித்த தோடி மற்றொரழகு! இன்னொன்றும் ஏதொன்றுக்கும் இருக்கட்டும் என்று வாசித்துப் பதிவானது இன்னொரு அழகான தோடி. சில உடன்பிறப்புக் கன்னியரில் யார் அழகு என்று தீர்மானிக்க முடியாமல் திணறிப் போய்விடுவோம். அது போல் ஆகிவிட்டதாம். வெளிவந்த தோடிதான் நாம் அறிவோம். அந்த மற்றது இன்னும் இருக்குமா; அதையும் நாம் கேட்க முடியுமா. தெரியவில்லை.


ஒரு ராகத்தில் பல்வேறு வடிவ வர்ணமெட்டுக்களில் ஒரே ராகத்தில் பல கீர்த்தனைகளை உண்டாக்க முடியும். சத்திவேல் சொன்ன இன்னொரு தகவல். கல்யாணி ராகத்தில் என்று ஞாபகம். அந்தக் கீர்த்தனை; அதைக் கீர்த்தனை என்று சொல்லுவதை விட வர்ணமெட்டு என்று சொல்லுவதுதான் சரி. வார்த்தைகள் இல்லாத சுரங்களால் மட்டுமே ஆன கீர்த்தனை வடிவம்.

இதை ராஜரத்தினம் சத்திவேலுவுக்குப் பாடியும் காட்டி நாயனத்தில் வாசித்தும் காண்பித்திருக்கிறார். இது போன்ற வர்ணமெட்டுக் கீர்த்தனைகளைப் புல்லாங்குழல், நாயனம், மாண்டலின் போன்ற இசைக் கச்சேரிகளில் ஜமாய்க்க முடியும். பாட முடியாது.


இந்தக் கீர்த்தனை மெட்டு ராஜரத்தினம் உண்டாக்கியதா அவரது முன்னோர்கள் வாத்திய இசைப்பில் வாசிப்பதற்கென்றே உண்டாக்கினார்களா, இது போல் மற்ற ராகங்களிலும் இருக்கிறதா – தெரியவில்லை. நினைத்தபோதெல்லாம் நினைத்தபடிக்ககு எந்த இடத்திலும் ஒரு கேமராவில் படம் பிடிப்பது போல – ஒலிப்பதிவு வசதி அந்தக் காலத்தில் கிடையாது. அப்படி இருந்திருந்தால் ராஜரத்தினம், விளாத்திகுளத்தின் ராக வடிவங்களைப் பதிவு செய்திருக்கலாம்.

இப்படி எவ்வளவோ விசயங்கள் இல்லாமல் போய்விட்டதால் அவை இல்லாமல் ஆகிவிட்டது. அதனால் விளாத்திகுளம் இல்லை, திருவாடுதுறையும் இல்லை.

அந்த நந்தவனம் அழிந்து விட்டது இடைசெவலில்.

434 views

Comments


bottom of page