top of page

இடைசெவல்

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் 16 செப்டம்பர் 1922 அன்று கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார் . கி.ராவின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.

article_image_1.jpg

​குடும்பம்

கி.ரா, கணவதி அம்மாளை 6 செப்டம்பர் 1954 அன்று திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகும்போதே கி.ரா.வுக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. கி.ரா ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டார் என அவர் காதுபடவே பேசியதையும் தாண்டிக் கி.ராவை தனது 19 வயதில் கணவதி கைப்பிடித்தார். கணவர் மீதான அன்பால் குடும்பப் பொறுப்பையும்,  வயல் வேலைகளையும் கணவதி கையில் எடுத்துக்கொண்டு கி.ரா.வைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர் கணவதி. கி.ரா.வுக்கு எப்போதும் கணவதி அம்மாள் மீது பாசம் அதிகம்.
 

இருவரும் தங்களுக்குள் சண்டையே வந்ததில்லை எனக் கூறுவர். கணவதி அம்மாள் 2019 ஆம் ஆண்டு கி.ராவை விட்டுப் பிரிந்து சென்றார். 

கி.ரா - கணவதி தம்பதியருக்கு இரண்டு மகன்கள். அவரது குடும்பத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள படத்தை சொடுக்கவும்.

 

family_tree.jpg

விருதுகள்

  • சாகித்ய அகாடமி விருது,

  • இலக்கிய சிந்தனை விருது,

  • தமிழக அரசின் 2021ம் ஆண்டுக்கான உ.வே.சா விருது,

  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது

  • ​பேரா. சுந்தரனார் விருது 

SA_AWARD_new.png

முதல் சிறுகதை 

கி.ராவின் முதல் சிறுகதை ‘சொந்த சீப்பு’. 1958இல் சரஸ்வதி இதழில் வெளியான ‘மாயமான்’ பெரும் கவனத்தைப் பெற்றது. இவரது 'கதவு' கதையும் பெரும் கவனத்தைப் பெற்றது, அக்கதையைப் பாராட்டி கடிதம் எழுதிய சுந்தர ராமசாமி, அது ஆண்டன் செகாவின் பானியில் இருப்பதாகப் புகழ்ந்தார்.
 

இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை

article_image_6.jpg

படைப்புலகம்

“வாய்மொழி வரலாற்றைப் பொது வரலாறு ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மாற்றித் தனது படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார் கி.ரா. ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டு படைப்புகளும் இதற்கான சிறந்த உதாரணங்கள்.” - எஸ்.ராமகிருஷ்ணன்.

கரிசல் மண்னையும், அதன் மனிதர்களையும் பற்றி எழுதிய கி.ரா , கதைகள், நாவல்,  குறுநாவல், கட்டுரை என விரிவான தளத்தில் இயங்கினார்.  கரிசல் வட்டாரத்தில் சிறப்பாக வழங்கும் தமிழ்ச் சொற்களுக்கான கரிசல் வட்டார வழக்கு அகராதியை உருவாக்கினார். நாட்டுப்புற இலக்கியங்களைத் தேடி, ஆராய்ந்து ஒரு தொகுப்பாக வெளியிட்டார்.

article_image_7.jpg

​புதுவை

 ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். 1989 ஆம் ஆண்டு புதுவைக்கு வந்த கி.ரா, இலகக்கிய வட்ட நண்பர்கள், மாணவர்கள், கடற்கரை சூழல் எல்லாம் பிடித்துப்போகத் தன் வாழ்நாள் இறுதிவரை புதுவையில் இருந்தார். 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். இவரது உடல் இவரது சொந்த ஊரான இடைசெவலில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

puducherry.jpg
bottom of page